9 டிசம்பர், 2014

பாரதியின் அக்னி குஞ்சு.

ஒரு நாள் என்னுடைய பிறந்த தினம் வந்தது.   அநேகம் பேர் வாழ்த்தினர்.  ஒருத்தர் காபி கப் பரிசளித்தார்... பேஸ்புக்கில் சிலர் வாழ்த்து அட்டை அனுப்பினர்.....விசால மனம் கொண்ட நண்பர்கள் மட்டும்  கை கொடுத்து "பார்ட்டி எப்போ?" என்று நான் அவர்களுடைய பிறந்த தினத்தில் கேட்டது போலவே கவலையுடன் கேட்டார்கள்.  அதில் அதிகம் ஆங்கிலம் கலந்து பேசும் ஒருத்தர் அழுத்தமாக கை குலுக்கி "May all your dreams come true, Magesh" என்று மனதார வாழ்த்தி இறுக அணைத்து மகிழவைத்தார்.  என்ன ஒரு பிரமாதமான வாழ்த்து.  இதை விட அழகாக வேறு எப்படி வாழ்த்த முடியும் என்று தெரியவில்லை. இந்த வாழ்த்து என் மனதின் எண்ண ஓட்டங்களை ஆட்டிப்படைக்கும் ஆசைகளை பற்றியது என்பதாலா அல்லது அவர் கை குலுக்கலின் அழுத்தம் என் கனவுகள் நினைவாகவேண்டும் என்று அவர் உண்மையாகவே விரும்பியதாக எனக்கு பட்டதாலா எனறு தெரியவில்லை,  மிக சந்தோஷமாக இருந்தது.    விவேகானந்தர் ஒரு முறை பிரசங்கத்தின் போது ,  "நீ என்ன ஆக வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறாயோ அதுவாகவே மாறிப் போகிறாய்" என்று சொல்கிறார்.   அவர் சொன்ன பல மேற்கோள்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  நம் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று ஏங்கித் தவிக்காத நிமிடங்கள் தான் இருக்கிறதா?  உறங்கும் போதும் கனவில் வந்து தூக்கம் கெட செய்கிறதே!

மனிதன் கண்டறிந்த ஒரு மகத்தான பொய் "கனவு".   இல்லையா? அது நமக்கே சொந்தமான ஓர் இனம் புரியாத அற்புத உலகம்.   ஒரு நொடிப்பொழுதில் நம்மை அவ்வுலகிற்கு அழைத்து செல்லக்கூடிய நமக்கு நாமே படைத்து கொண்ட கடவுள், நம் கனவுகள்.  அது பகல் கனவாகவே இருந்தாலும் கூட அதை அசைபோடுவதில் தான் எவ்வளவு சுகம்.   கடவுள் இருக்கிறார் என்று பலரின் தீவிரமான நம்பிக்கைக்கும் மேலானது  அவர்கள் வாழ்வில் சாதிக்க கொண்டிருக்கும் கனவுகள் என்றே நம்புகிறேன்.  ஆனால்,   தன் கனவு தான் தன்னுடைய கடவுள் என்று ஏனோ பலருக்கு விளங்குவதில்லை. கடவுளையும் கனவையும் பிரித்தாள்வதிலேயும், கடவுளையும் தனது கனவுகளை சாதிக்க உறுதுணையாக்கி கொள்வதிலேயும்  பெரும்  சக்தி விரயமாக்கபடுகிறது.  நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை. சாதாரணமானவன்.    ஆசைகளை தன் வாழ்நாள் முழுவதும் அடைகாத்து தக்க தருணத்தில் வண்ண குஞ்சுகளாக ஈன்றெடுக்கும் உணர்வை அனுபவிக்க ஏங்கும் ஒரு மனிதனின் கவிதை தான் பாரதி எழுதிய "அக்னி குஞ்சொன்று கண்டேன்" என்பது என் புரிதலாக இருக்கிறது.

"அக்னி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"

- பாரதி.

நம் ஆசைகள் தான் பாரதி சொன்ன அக்னியாக எனக்கு தோன்றுகிறது.    கனவுகள் சாதாரண சிந்தனைகளை போலல்லாமல் ஓர் இலக்கை நிர்ணயித்து எப்பொழுதும் அதே நோக்கத்துடனே திரிகிறது.  மனம் என்னும் அடர்ந்த காட்டினிடையே உள்ள ஒரு பொந்திற்குள் திறமையாக மறைத்து பாதுகாக்கபடுகின்ற ஒரு உணர்வு.   ஆழ்மனதில் சிறு பொறியாக இருந்தாலும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து சிதற தயாராக இருக்கும் கட்டுக்கடங்கா  உணர்ச்சி.   தீயினும் பரிசுத்தமானது.  தீயை போல நம்மை சுட்டெரிக்கும் வல்லமை படைத்தது. நம் மனதை ஏக்கத்தில் அலைகழித்து வழி நடத்தவில்லையென்றால் அது கனவே அல்ல.   ஒருமுறையேனும் விமானத்தில் பறக்கவேண்டும் என்ற ஒரு கனவு, கார்,  திருமணம்,  மகப்பேறு,  வீடு,   காதல், படிப்பு,  வெற்றி,  பணம், பயணம்,  வாய்ப்பு,  முன்னேற்றம் என நம் கனவுப் பரிமானங்களின் வண்ணங்கள் ஏராளம்.  ஆசைகளும் கனவுகளும், நம் வாழ்வில் காணும் ஏற்ற இறக்கங்களை எதிர் கொள்ள வைக்கும் நம்பிக்கையை நமக்கு தருகிறது.   இதில் சிறியது பெரியது என்று பாகுபாடு எற்படுத்துவது நம்முடைய அச்சமைய சூழ்நிலையும் நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் தானே தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.   அதே போல இது அடைய முடிந்தது அடைய முடியாதது என்பதும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.   நாம் காணும் கனவுகள் அனைத்தும் அடைய முடிபவைதான்.  Richard Bach என்னும்  தத்துவஞானி ஒருவர் "you are never given a wish without  the power of making it come true....you may have to work for it however"  என்று கூறுகிறார்.

பாரதிக்குள் எரிந்த அக்னியை போல, உங்களுக்குள் எரியும் உங்களை எரிக்கும் அக்னியை யக்ஞ குண்டத்தை போல பெருந்தழலாக ஒளிரச்செய்து உண்மையாக்கி பெருமிதம் அடைய என் வாழ்த்துக்கள். 

May all your dreams come true.

- மகேஷ்