25 ஜூன், 2015

இன்றைய ஜாகிங்.....ஏன் போக முடியல...ரீசன்ஸ்.

கடந்த நாலு மாசம்...ஏகப்பட்ட வேலை.  வாரநாள் வாரக்கடைசி....எதுவும் விதிவிலக்கில்ல. ..ஆபிஸுக்கு போயிட்டு வரகூடிய பிரயாண நேரம் இல்லாம...  ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12 மணி நேர வேலை.......சனி ஞாயிறு உட்பட.  ஆனா இந்த வேலை பளுவா இல்லாதது ஒரு ஆறுதல். தினம் ராத்திரி தூங்க மணி 1130 - 1200 ஆகிடுது....காலையில 530 க்கு எழுந்தா கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். ...அப்படியே உலர்ந்து போன உணர்வு. ...அதீத அயர்ச்சியினால உடம்பு மனசு...ரெண்டுத்துலேயும ஒரு காய்ந்த மரக்கட்டையை போன்ற ஒரு வெறிச்சோடின நிலைமை.

எழுந்த உடனே ஞாபகத்திற்கு வர்றது மொத நாள் முடிக்காம விட்ட வேலைதான்...பல்ல தேச்சிட்டு அத உடனே தொடரனும்னு ஒரு எண்ணம் வந்துடுது. இது எல்லாத்துக்கும் நடுவுல நான் கணிசமா ஓடி...ஆறு மாசம் ஆகிப்போச்சுங்குற எண்ணம்  தொடர்ந்து ஞாபகத்திற்கு வந்து ஒரு விதமான, குற்ற உணர்ச்சியா இல்லை ஏக்கமானு  வரையருக்கமுடியாத ஒரு உணர்வு எட்டி பாக்குது. ..(that nagging feeling at the back of your mind). பேஸ்புக்கில் ரன்னிங் சம்பந்தமா ஏகப்பட்ட  பேர்...நண்பர்கள், நான் பின் தொடரும் ஜாம்பவான்கள்....அவங்க பண்ண சின்ன பெரிய சாதனைகள்னு....பட்டியல் தெனமும் நீண்டுகிட்டே போகுது....மணி, கண்ணன்,  தீபா, பத்ரி. ..இவங்களெல்லாம் ஒட ஆரம்பிச்சுடாங்க...நம்மால ஒட முடியலியேன்னு ஒரு சின்ன பொறாம....

பேஸ்புக்கில ஒருத்தர் என்னை மாதிரி ஓட முடியலேன்னு சொன்னதுக்கு இன்னொருத்தர், மொத 20 நிமிஷம் தான் கஷ்டம். ..அப்புறம் சூப்பரா பீல் பண்ணுவீங்கனு கொளுத்தி போட்டுட்டாரு நேத்து.....அவ்ளோ தான்..... எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு எனர்ஜி கெடச்சுதோ தெரியல....எஸ்ஸ்... யூ டூ கேன் டு இட் மகேஷ்னு...முழங்கைய மடக்கி நானே என் மூஞ்சியிலேயும் விலாவுலையும் குத்திக்காத கொறையா சொல்லிகிட்டேன்....

உன்னால் முடியும் உன்னால் முடியும் வாடா.....
உன்னால் முடியும் உன்னால் முடியும் ஒடுடானு.....

பாடிட்டே நான் வேகமா ஒடுறாப்ல ஒரு  கனவு. ஹால்ல சும்மா முகமது அலி பாக்ஸிங்குக்கு தயாராகுர மாதிரி, நம்ம மணிய நெனைச்சு..... லைட்டா குதிச்சிக்கிட்டே காத்துல பஞ்செல்லாம் விட்டேன்....எஸ்....எஸ்...எஸ்....

'போதும் நிறுத்து'... கர்ண கடூரமா கராரா ஒரு குரல்......உய்.......எவோ அவோனு தெனாவட்டா திரும்பி பாத்தேன்.  என் பொண்டாட்இ...இ....இ...இ.....
ஹி....ஹி...தலைய சொரிஞ்சிகிட்டே ஒன்னும் தெரியாத மாதிரி என்னாச்சுமானு கேட்டேன்.....டைம் பாத்தீங்களா....11:30...லேப்டாப்ப ஸ்விச்ஆப் பண்ணிட்டு... பேசாம ஒழுங்கா வேட்டிய கட்டிகிட்டு...போய் படுத்து தூங்குங்கனு.......அடிக்காத குறையா அன்பா சொன்னாங்க.....நான் விஜய் மாதிரி கைய விரிச்சு....என்னை தாலாட்ட வருவாளானு....தலைய லைட்டா சொடக்கு போட்டுட்டே....பெட்ரும் போயி அலாரத்த 5:30 க்கு செட் பண்ணிட்டு படுத்துட்டேன்...

காலை 5:30.  Moment of truth.  அலாரம் அடிக்குற சத்தம் காதுல நாராசமா கேக்குது....சே!! இது வேற......அப்படியே பொதுவா துழாவி மொபைல எடுத்து...அலாரத்த ஸ்விச்ஆப் பண்ணேன்..தூக்கம் சுத்தமா போயிடுச்சு....அந்த இருவது நிமிஷ தத்துவ ஞானி ஞாபகத்துக்கு வந்தாரு......கண்ண தொறக்க ட்ரை பண்றேன்....முடியல.....என் வொய்ப் எழுந்துட்டாங்க....போற போக்குல ....டைம் 5:30 னு சொன்னாங்க....நேத்து நைட் கொஞ்சம் அதிகமா பில்டப் குடுத்துட்டனோனு தோணுச்சு....சக்தியெல்லாம் திரட்டி 5:40 க்கு எழுந்தேன்...காலை கடனெல்லாம் முடிச்சு ஆறு மணிக்கு டீ ஷர்ட் ஷார்ட்ஸ் போட்டு ரெடியாகிட்டேன்.  அப்ப பாத்து என் வொய்ப்....இருங்க வெறும் வயித்துல ஒடதீங்க...கொஞ்சம் கேழ்வரகு கஞ்சி குடிச்சிட்டு போங்கனு சொன்னாங்க.  அடடா....இப்படி ஒரு கவனிப்பானு உக்காந்தேன்.  டீவியில யாரோ ஒருத்தர் பிரசங்கம் பண்ணிட்டு இருந்தாரு.  சேனல மாத்திகிட்டே வரும் போது பொதிகையில "பொன் விளையும் பூமி" என்னோட பேவரெட் ப்ரோக்கராம் போயிட்ருந்தது......நம்ம வெங்கடாசலபதி பாப்பாரானு தெரியல....அதுல பொன்மீன் வளர்பது எப்படி மற்றும் பப்பாளியை பாதிக்கும் படர் பூச்சிக்கு எப்படி வேப்பெண்ணையை யூஸ் பண்ணுவது போன்ற.... பல அரிய தகவல்களை தந்துட்டிருந்தாங்க....ஒரு கையில ராகி கஞ்சி. ..டீவீல பொன் விளையும் பூமி. ...அவ்ளோ தான். .உக்காந்துட்டேன்.    என் வொய்ப் வந்து...இன்னிக்கும் போகலியா நீங்க.....கடுகடுப்பு குரல். ...இதோ கெளம்ப போறேன்னு சொல்லுரதுக்குள்ள....இதுல டீஷர்டு ஷார்ட்ஸு கஞ்சி வேறணு முணுமுணுப்பு கேக்குது.   ரொம்ப கோபம் வந்தாலும்....தெனம் ஒடி எப்பவோ குறையப் போற தொப்பையவிட கண்ணுக்கு முன்னாடி இருக்குற பாப்பாளிய எப்படி காப்பாத்துறதுனு தெரிஞ்சிக்குற ஆர்வம் அதிகமாக இருந்ததால.....நாளைக்கு போய்க்கலாம் முடிவு பண்ணி டீவி முன்னாடி உக்காந்துட்டேன். இன்னிக்கும் ஒடல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக