25 ஜூன், 2015

இன்றைய ஜாகிங்.....ஏன் போக முடியல...ரீசன்ஸ்.

கடந்த நாலு மாசம்...ஏகப்பட்ட வேலை.  வாரநாள் வாரக்கடைசி....எதுவும் விதிவிலக்கில்ல. ..ஆபிஸுக்கு போயிட்டு வரகூடிய பிரயாண நேரம் இல்லாம...  ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12 மணி நேர வேலை.......சனி ஞாயிறு உட்பட.  ஆனா இந்த வேலை பளுவா இல்லாதது ஒரு ஆறுதல். தினம் ராத்திரி தூங்க மணி 1130 - 1200 ஆகிடுது....காலையில 530 க்கு எழுந்தா கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். ...அப்படியே உலர்ந்து போன உணர்வு. ...அதீத அயர்ச்சியினால உடம்பு மனசு...ரெண்டுத்துலேயும ஒரு காய்ந்த மரக்கட்டையை போன்ற ஒரு வெறிச்சோடின நிலைமை.

எழுந்த உடனே ஞாபகத்திற்கு வர்றது மொத நாள் முடிக்காம விட்ட வேலைதான்...பல்ல தேச்சிட்டு அத உடனே தொடரனும்னு ஒரு எண்ணம் வந்துடுது. இது எல்லாத்துக்கும் நடுவுல நான் கணிசமா ஓடி...ஆறு மாசம் ஆகிப்போச்சுங்குற எண்ணம்  தொடர்ந்து ஞாபகத்திற்கு வந்து ஒரு விதமான, குற்ற உணர்ச்சியா இல்லை ஏக்கமானு  வரையருக்கமுடியாத ஒரு உணர்வு எட்டி பாக்குது. ..(that nagging feeling at the back of your mind). பேஸ்புக்கில் ரன்னிங் சம்பந்தமா ஏகப்பட்ட  பேர்...நண்பர்கள், நான் பின் தொடரும் ஜாம்பவான்கள்....அவங்க பண்ண சின்ன பெரிய சாதனைகள்னு....பட்டியல் தெனமும் நீண்டுகிட்டே போகுது....மணி, கண்ணன்,  தீபா, பத்ரி. ..இவங்களெல்லாம் ஒட ஆரம்பிச்சுடாங்க...நம்மால ஒட முடியலியேன்னு ஒரு சின்ன பொறாம....

பேஸ்புக்கில ஒருத்தர் என்னை மாதிரி ஓட முடியலேன்னு சொன்னதுக்கு இன்னொருத்தர், மொத 20 நிமிஷம் தான் கஷ்டம். ..அப்புறம் சூப்பரா பீல் பண்ணுவீங்கனு கொளுத்தி போட்டுட்டாரு நேத்து.....அவ்ளோ தான்..... எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு எனர்ஜி கெடச்சுதோ தெரியல....எஸ்ஸ்... யூ டூ கேன் டு இட் மகேஷ்னு...முழங்கைய மடக்கி நானே என் மூஞ்சியிலேயும் விலாவுலையும் குத்திக்காத கொறையா சொல்லிகிட்டேன்....

உன்னால் முடியும் உன்னால் முடியும் வாடா.....
உன்னால் முடியும் உன்னால் முடியும் ஒடுடானு.....

பாடிட்டே நான் வேகமா ஒடுறாப்ல ஒரு  கனவு. ஹால்ல சும்மா முகமது அலி பாக்ஸிங்குக்கு தயாராகுர மாதிரி, நம்ம மணிய நெனைச்சு..... லைட்டா குதிச்சிக்கிட்டே காத்துல பஞ்செல்லாம் விட்டேன்....எஸ்....எஸ்...எஸ்....

'போதும் நிறுத்து'... கர்ண கடூரமா கராரா ஒரு குரல்......உய்.......எவோ அவோனு தெனாவட்டா திரும்பி பாத்தேன்.  என் பொண்டாட்இ...இ....இ...இ.....
ஹி....ஹி...தலைய சொரிஞ்சிகிட்டே ஒன்னும் தெரியாத மாதிரி என்னாச்சுமானு கேட்டேன்.....டைம் பாத்தீங்களா....11:30...லேப்டாப்ப ஸ்விச்ஆப் பண்ணிட்டு... பேசாம ஒழுங்கா வேட்டிய கட்டிகிட்டு...போய் படுத்து தூங்குங்கனு.......அடிக்காத குறையா அன்பா சொன்னாங்க.....நான் விஜய் மாதிரி கைய விரிச்சு....என்னை தாலாட்ட வருவாளானு....தலைய லைட்டா சொடக்கு போட்டுட்டே....பெட்ரும் போயி அலாரத்த 5:30 க்கு செட் பண்ணிட்டு படுத்துட்டேன்...

காலை 5:30.  Moment of truth.  அலாரம் அடிக்குற சத்தம் காதுல நாராசமா கேக்குது....சே!! இது வேற......அப்படியே பொதுவா துழாவி மொபைல எடுத்து...அலாரத்த ஸ்விச்ஆப் பண்ணேன்..தூக்கம் சுத்தமா போயிடுச்சு....அந்த இருவது நிமிஷ தத்துவ ஞானி ஞாபகத்துக்கு வந்தாரு......கண்ண தொறக்க ட்ரை பண்றேன்....முடியல.....என் வொய்ப் எழுந்துட்டாங்க....போற போக்குல ....டைம் 5:30 னு சொன்னாங்க....நேத்து நைட் கொஞ்சம் அதிகமா பில்டப் குடுத்துட்டனோனு தோணுச்சு....சக்தியெல்லாம் திரட்டி 5:40 க்கு எழுந்தேன்...காலை கடனெல்லாம் முடிச்சு ஆறு மணிக்கு டீ ஷர்ட் ஷார்ட்ஸ் போட்டு ரெடியாகிட்டேன்.  அப்ப பாத்து என் வொய்ப்....இருங்க வெறும் வயித்துல ஒடதீங்க...கொஞ்சம் கேழ்வரகு கஞ்சி குடிச்சிட்டு போங்கனு சொன்னாங்க.  அடடா....இப்படி ஒரு கவனிப்பானு உக்காந்தேன்.  டீவியில யாரோ ஒருத்தர் பிரசங்கம் பண்ணிட்டு இருந்தாரு.  சேனல மாத்திகிட்டே வரும் போது பொதிகையில "பொன் விளையும் பூமி" என்னோட பேவரெட் ப்ரோக்கராம் போயிட்ருந்தது......நம்ம வெங்கடாசலபதி பாப்பாரானு தெரியல....அதுல பொன்மீன் வளர்பது எப்படி மற்றும் பப்பாளியை பாதிக்கும் படர் பூச்சிக்கு எப்படி வேப்பெண்ணையை யூஸ் பண்ணுவது போன்ற.... பல அரிய தகவல்களை தந்துட்டிருந்தாங்க....ஒரு கையில ராகி கஞ்சி. ..டீவீல பொன் விளையும் பூமி. ...அவ்ளோ தான். .உக்காந்துட்டேன்.    என் வொய்ப் வந்து...இன்னிக்கும் போகலியா நீங்க.....கடுகடுப்பு குரல். ...இதோ கெளம்ப போறேன்னு சொல்லுரதுக்குள்ள....இதுல டீஷர்டு ஷார்ட்ஸு கஞ்சி வேறணு முணுமுணுப்பு கேக்குது.   ரொம்ப கோபம் வந்தாலும்....தெனம் ஒடி எப்பவோ குறையப் போற தொப்பையவிட கண்ணுக்கு முன்னாடி இருக்குற பாப்பாளிய எப்படி காப்பாத்துறதுனு தெரிஞ்சிக்குற ஆர்வம் அதிகமாக இருந்ததால.....நாளைக்கு போய்க்கலாம் முடிவு பண்ணி டீவி முன்னாடி உக்காந்துட்டேன். இன்னிக்கும் ஒடல.

9 டிசம்பர், 2014

பாரதியின் அக்னி குஞ்சு.

ஒரு நாள் என்னுடைய பிறந்த தினம் வந்தது.   அநேகம் பேர் வாழ்த்தினர்.  ஒருத்தர் காபி கப் பரிசளித்தார்... பேஸ்புக்கில் சிலர் வாழ்த்து அட்டை அனுப்பினர்.....விசால மனம் கொண்ட நண்பர்கள் மட்டும்  கை கொடுத்து "பார்ட்டி எப்போ?" என்று நான் அவர்களுடைய பிறந்த தினத்தில் கேட்டது போலவே கவலையுடன் கேட்டார்கள்.  அதில் அதிகம் ஆங்கிலம் கலந்து பேசும் ஒருத்தர் அழுத்தமாக கை குலுக்கி "May all your dreams come true, Magesh" என்று மனதார வாழ்த்தி இறுக அணைத்து மகிழவைத்தார்.  என்ன ஒரு பிரமாதமான வாழ்த்து.  இதை விட அழகாக வேறு எப்படி வாழ்த்த முடியும் என்று தெரியவில்லை. இந்த வாழ்த்து என் மனதின் எண்ண ஓட்டங்களை ஆட்டிப்படைக்கும் ஆசைகளை பற்றியது என்பதாலா அல்லது அவர் கை குலுக்கலின் அழுத்தம் என் கனவுகள் நினைவாகவேண்டும் என்று அவர் உண்மையாகவே விரும்பியதாக எனக்கு பட்டதாலா எனறு தெரியவில்லை,  மிக சந்தோஷமாக இருந்தது.    விவேகானந்தர் ஒரு முறை பிரசங்கத்தின் போது ,  "நீ என்ன ஆக வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறாயோ அதுவாகவே மாறிப் போகிறாய்" என்று சொல்கிறார்.   அவர் சொன்ன பல மேற்கோள்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  நம் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று ஏங்கித் தவிக்காத நிமிடங்கள் தான் இருக்கிறதா?  உறங்கும் போதும் கனவில் வந்து தூக்கம் கெட செய்கிறதே!

மனிதன் கண்டறிந்த ஒரு மகத்தான பொய் "கனவு".   இல்லையா? அது நமக்கே சொந்தமான ஓர் இனம் புரியாத அற்புத உலகம்.   ஒரு நொடிப்பொழுதில் நம்மை அவ்வுலகிற்கு அழைத்து செல்லக்கூடிய நமக்கு நாமே படைத்து கொண்ட கடவுள், நம் கனவுகள்.  அது பகல் கனவாகவே இருந்தாலும் கூட அதை அசைபோடுவதில் தான் எவ்வளவு சுகம்.   கடவுள் இருக்கிறார் என்று பலரின் தீவிரமான நம்பிக்கைக்கும் மேலானது  அவர்கள் வாழ்வில் சாதிக்க கொண்டிருக்கும் கனவுகள் என்றே நம்புகிறேன்.  ஆனால்,   தன் கனவு தான் தன்னுடைய கடவுள் என்று ஏனோ பலருக்கு விளங்குவதில்லை. கடவுளையும் கனவையும் பிரித்தாள்வதிலேயும், கடவுளையும் தனது கனவுகளை சாதிக்க உறுதுணையாக்கி கொள்வதிலேயும்  பெரும்  சக்தி விரயமாக்கபடுகிறது.  நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை. சாதாரணமானவன்.    ஆசைகளை தன் வாழ்நாள் முழுவதும் அடைகாத்து தக்க தருணத்தில் வண்ண குஞ்சுகளாக ஈன்றெடுக்கும் உணர்வை அனுபவிக்க ஏங்கும் ஒரு மனிதனின் கவிதை தான் பாரதி எழுதிய "அக்னி குஞ்சொன்று கண்டேன்" என்பது என் புரிதலாக இருக்கிறது.

"அக்னி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"

- பாரதி.

நம் ஆசைகள் தான் பாரதி சொன்ன அக்னியாக எனக்கு தோன்றுகிறது.    கனவுகள் சாதாரண சிந்தனைகளை போலல்லாமல் ஓர் இலக்கை நிர்ணயித்து எப்பொழுதும் அதே நோக்கத்துடனே திரிகிறது.  மனம் என்னும் அடர்ந்த காட்டினிடையே உள்ள ஒரு பொந்திற்குள் திறமையாக மறைத்து பாதுகாக்கபடுகின்ற ஒரு உணர்வு.   ஆழ்மனதில் சிறு பொறியாக இருந்தாலும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து சிதற தயாராக இருக்கும் கட்டுக்கடங்கா  உணர்ச்சி.   தீயினும் பரிசுத்தமானது.  தீயை போல நம்மை சுட்டெரிக்கும் வல்லமை படைத்தது. நம் மனதை ஏக்கத்தில் அலைகழித்து வழி நடத்தவில்லையென்றால் அது கனவே அல்ல.   ஒருமுறையேனும் விமானத்தில் பறக்கவேண்டும் என்ற ஒரு கனவு, கார்,  திருமணம்,  மகப்பேறு,  வீடு,   காதல், படிப்பு,  வெற்றி,  பணம், பயணம்,  வாய்ப்பு,  முன்னேற்றம் என நம் கனவுப் பரிமானங்களின் வண்ணங்கள் ஏராளம்.  ஆசைகளும் கனவுகளும், நம் வாழ்வில் காணும் ஏற்ற இறக்கங்களை எதிர் கொள்ள வைக்கும் நம்பிக்கையை நமக்கு தருகிறது.   இதில் சிறியது பெரியது என்று பாகுபாடு எற்படுத்துவது நம்முடைய அச்சமைய சூழ்நிலையும் நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் தானே தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.   அதே போல இது அடைய முடிந்தது அடைய முடியாதது என்பதும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.   நாம் காணும் கனவுகள் அனைத்தும் அடைய முடிபவைதான்.  Richard Bach என்னும்  தத்துவஞானி ஒருவர் "you are never given a wish without  the power of making it come true....you may have to work for it however"  என்று கூறுகிறார்.

பாரதிக்குள் எரிந்த அக்னியை போல, உங்களுக்குள் எரியும் உங்களை எரிக்கும் அக்னியை யக்ஞ குண்டத்தை போல பெருந்தழலாக ஒளிரச்செய்து உண்மையாக்கி பெருமிதம் அடைய என் வாழ்த்துக்கள். 

May all your dreams come true.

- மகேஷ்

21 நவம்பர், 2014

வரதராஜனும் அரூபாவும்

நேத்து ராத்திரி 11 மணிக்கு காலிங்பெல்.  நேத்துனு பார்த்து அத்தி பூத்தாபோல எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை....அது சம்பந்தமாதான் எவனோ ஏதோ கேட்க வந்துட்டான் போலருக்குனு, நானும் வடிவேலு மாதிரி அடடா கடைய பெருசாக்கினாலும் ஆக்கினோம்....பன்னென்டு மணிக்கு கூட பன்னு வேணும் வெண்ண வேணும்னு வந்துடராங்கனு சலிச்சிகிட்டே போய் பார்த்தேன்.   பாத்தா...நம்ம வரதராஜன் ஜி.   நான் அமெரிக்காவையும் அரூபாவும் பாக்க போறேன்.... சீயா இன் டிசெம்பர்னு ஸ்டைலா சொன்னார்.  (நான் சொல்லல ராஜன்ஜி ஒரு உலகம் சுற்றும் வாலிபர்னு). சரி விஷயத்துக்கு வருவோம்.

அரூபாவா..யாரு அதுனு தலைய சொரிஞ்சிகிட்டே யோசிச்சேன்.  என்னடா இது எவ்ளோ யோசிச்சாலும், நாம கேள்வி படாத பேரா இருக்கே......இவரு வேற அமெரிக்கா போறேனு சொல்ராரு. அமெரிக்கால யாரு நமக்கு தெரியாத
அரூரூரூபாஹ்(என்னமோ அமெரிக்கால எனக்கு எல்லாரையும் தெரிஞ்ச மாதிரி).......ஒரு வேளை  அரூபா - மிஷெல் ஒபாமாவோட ஒண்ணு விட்ட சித்தப்பா பொண்ணா இருக்குமோ. அதுலயும் ஒரு டவுட்டு. .. மிஷெலே அசிங்கமாதான் இருக்கும்.  அத்த போய் இவரு ஏன் இப்ப பாக்குராரு.......ஒரு வேள இவங்க ரெண்டு பேரும் சில்லுனு ஒரு காதல் படத்துல வர்ர மாதிரி காலேஜ்ல ஒண்ணா படிச்சிருப்பாங்களோ....ம்ம்ம்ம். .அட சே.......ஒரு செகண்ட்ல....சுதாரிச்சி....... கண்ணடிச்சிகிட்டே... யாரு பாஸ் அந்த அதிருப சுந்தரி.... அரூரூரூபாஹ்ஆஆஆ....னு கேட்டேன்....சிரிச்சி கண்ண சரோஜாதேவி மாதிரி சிமிட்டி  சொல்லமாட்டேன் சீக்ரெட்னு போய்ட்டார். ....ஜனகராஜ் மாதிரி மண்ட வெடிச்சிடும் போலாயிடிச்சி.. ...

ராத்திரி முழுக்க கொரட்ட மட்டும் வருது தூக்கம் வரல....மல்லாக்க படுத்தா வீட்டு சீலிங்ல, அரூபாஹ், பாக்யராஜ் படத்துல வர டிஸ்கோ சாந்தி மாதிரி செட்டிங் போட்டு டான்ஸ்லாம் ஆடினாங்க...யாரு இந்த அரூபா....யாரு இந்த அரூபா. ..னு கேள்வி மேல கேள்வி.....சே...இப்படி சொல்லாம போய்ட்டாரே இந்த மனுஷன்.  தூங்கி எழுந்ததும் மொத வேலை இந்த அரூபாங்குற புரியாத புதிரை முடிச்சவிழ்குறதுதான். காலைல ஆறு மணிக்கு வெச்சிருந்த அலாரமை அஞ்சு மணிக்கு மாத்தி வெச்சேன்.  நீ சரியான முடிச்சவிக்கிடா மகேஷ்னு என்ன நானே பாராட்டிகிட்டு தூங்கிட்டேன். 

அஞ்சு மணிக்கு எழுந்து பல்ல தேச்சிட்டு கம்ப்யூட்டர்ல உக்காந்து மொதல்ல கூகிளை ஒபன் செஞ்சேன்.  இந்த கூகுள் இருக்கானே, எதையுமே சுயமா யோசிச்சி சொல்ல தெரியாதவன்,  எப்பவுமே அவென் சொன்னான் இவென் சொன்னானு அடுத்தவன் சொன்னத ஆட்டைய போட்டுருவான்.  (Google is the world biggest plagiarist னு ஒரு blog எழுதனும். சரி அத அப்புறம் பார்க்கலாம்.)   அரூரூரூபாஹ்ஆஆஆ யாருனு கேட்டதுக்கு விக்கி அங்கிள் Aruba is an island in the south carribean sea னு குடுக்குறான் டீடெய்லு.  போட்டோலாம் பாத்தா சூப்பரா இருக்கு. .. ராஜன்ஜி.... ஜேம்ஸ்பாண்டு வில்லன்கூட சண்டை போடுறேன் பேர்வழினு வெள்ளகார குட்டிங்கள இந்த மாதிரி இருக்குற தீவுக்குதான் கூட்டிகிட்டு போய் ஜல்சா பண்ணுவாரு.  பார்த்து ஜாக்கிரதை என்ஜாய்.